தஞ்சை, தெற்குவீதியில் வடிகால் மீது கட்டிய கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 பிரதான சாலைகளில் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 வீதிகளின் இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் வடிகால்கள் வெளியே தெரியாத அளவுக்கு காணப்பட்டன.
இதனால் மழைநேரங்களில் கழிவுநீர் வீதிகளில் ஓடக்கூடிய நிலை உள்ளது. இதனால் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை ஏற்று 4 வீதிகளிலும் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மேலவீதியில் வடிகால்கள் மீது கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், பள்ளி, கோவில்களின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் அகலமாக காட்சி அளிக்கிறது. அதேபோல் தெற்குவீதியில் வடிகால்கள் மீது கட்டப்பட்ட கட்டிடங்களையும் சிலர் தாமாகவே முன்வந்து இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பல கடைகளில் வடிகால் மீது கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றவில்லை. இதனால் அந்த கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகளே அகற்றுவதற்கு முடிவு செய்தனர். அதன்படி மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் 2 பொக்லின் எந்திரங்கள் மூலம் வடிகால் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
இதேபோல் கீழராஜவீதி, வடக்குவீதியிலும் வடிகால்கள் மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதன் உரிமையாளர்களே இடித்து அப்புறப்படுத்த முன்வர வேண்டும் எனவும், இல்லையென்றால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.