திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மணிவிழா, சதாபிஷேகம், ஆயுஷ் ஹோமம் மற்றும் ஆயுள் விருத்திக்கான யாக பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இதில் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டு, சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக வர்ணம் பூசப்பட்டு உள்ளது.
தற்போது குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கயல்விழி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், சீர்காழி துணை போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மணிமாறன் மற்றும் போலீசார், கோவில் குருக்கள் உடன் இருந்தனர்.