மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடலோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் பெய்ய தொடங்கி மழை நேற்று காலை 7 மணி வரை விடிய, விடிய பெய்தது.
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. சீர்காழி-52, மணல்மேடு-14, கொள்ளிடம்-5, தரங்கம்பாடி-3.
மழை காரணமாக நேற்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். நேற்று காலை 10 மணிக்கு மேல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் இதமான வெயில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.