விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.கவுன்சிலர் வெற்றி பெற்றார். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 11 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, அ.தி.மு.க. 3, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தே.மு.தி.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டிலும் வெற்றி பெற்று இருந்தது.
இந்த நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி, பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, மீண்டும் இந்த முறை தி.மு.க. கூட்டணியில் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 4-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் பதவிக்கு கிரிஜா திருமாறன் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த துணை தலைவர் தேர்தலிலும் கிரிஜா திருமாறன் களம் கண்டார். ஆனால் அவரை எதிர்த்து மற்றொரு தி.மு.க. கவுன்சிலரான ஜெயபிரபா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் துணை தலைவர் ஜெயபிரபா ஆகியோரிடம் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நகராட்சி தலைவராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தொடர்ந்து நீடிப்பார் எனவும், நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கும் வகையில், ஜெயபிரபா தனது பதவியை ராஜினாமா செய்வார் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நகராட்சி துணை தலைவர் பதவியை ஜெயபிரபா ராஜினாமா செய்யபோவதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெயபிரபா ஆகியோர் சென்னை சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசினர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு துணை தலைவர் பதவியை வழங்கும் வகையில் ஜெயபிரபா, தான் பதவி விலக போவதாக அவரிடம் தெரிவித்தார். அதனை தொல்.திருமாவளவன் வரவேற்றார். இதையடுத்து ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தொல்.திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து ஜெயபிரபா தனது பதவியை முறைப்படி இன்று (புதன்கிழமை) ராஜினாமா செய்வார் என தெரிகிறது.
இதனால் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டதால் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.