பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அவருடைய மனைவி ஷீலாதாஸ் (வயது 29) குத்துச்சண்டை, தடகளம், வெயிட் லிப்ட், கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றவர். தேசிய அளவில் பவர் லிப்டில் சாதனை படைத்து இரும்புப் பெண் பட்டம் பெற்றவர்.
தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள இவர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் உலக சாதனை நிகழ்த்த சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மாத கர்ப்பிணியான ஷீலாதாஸ் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. சர்வதேச முதியோர் தடகள வீராங்கனை திலகவதி தலைமை தாங்கினார்.
நோபல் உலக சாதனைக்காக காலை 6.45 மணிக்கு சிலம்பம் சுற்றத் தொடங்கிய ஷீலாதாஸ் இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் 6 மணிநேரம் சுற்றி சாதனை படைத்தார். நோபல் உலக சாதனை ரஷியன் டைரக்டர் ஆர்.விக்னேஷ் நடுவராக இருந்து பதிவுசெய்தார். டாக்டர் சதாசிவம் பரிசுகள் வழங்கினார்.
“7 வயது முதல் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதால் சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தேயை கற்றுக் கொண்டு பல பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். 9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் டாக்டர்களின் முழு ஆலோசனையைப் பெற்று இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டேன். உடல் உழைப்பைத் தாண்டி மன தைரியத்தில் தான் இது முடிந்தது என்றார்.”