திருக்கடையூர்: குண்டும், குழியுமாக காணப்படும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும், ஆயுள்ஹோமம், சதாபிஷேகம், மணி விழா போன்ற திருமணங்களும், முக்கிய யாகபூஜைகள் இங்கு மட்டுமே நடைபெறுவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும், முக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கோவில் எதிர்புறம் உள்ள சன்னதி சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே பக்தர்களின் நலன் கருதி குடமுழுக்கு நடப்பதற்கு முன்னதாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.