வெளிப்பாளையம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.
முந்திரி பயிரில் தேயிலை கொசுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை ஆகிய வட்டாரங்களில் 849.33 எக்டேர் பரப்பளவில் முந்திரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது முந்திரி பயிரை தேயிலை கொசுக்கள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துவதற்கான சூழல் நிலவி வருகிறது. முந்திரி பயிரை தாக்கும் நன்றாக வளர்ந்த பூச்சியானது, சிவப்பு நிறத்துடன், கருப்பு நிறத் தலை, சிவப்பு நிற மார்புடன் காணப்படும். மேலும் பசுமை கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் இருக்கும்.
தேயிலை கொசுக்கள், இளம் இலைகள், பூங்கொத்துக்களில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். தாக்குதலுக்கு உள்ளான இலைகள் மேல் நோக்கி கருகியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான பகுதியின் தோல் கடின தன்மையடைந்து பழுப்பு நிறத்திட்டாக மாறி கருகி வாடிவிடும். எனவே மகசூல் இழப்பை தடுக்க தேயிலை கொசுக்களை கட்டுப்படுத்துவது அவசியம். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த, பிவேரியா பேசியானா என்ற பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் என்ற அளவில் கலந்து, இலை வழியாக தெளிக்க வேண்டும்.
செயற்கை முறையில் கட்டுப்படுத்த குளோரிபைரியஸ் என்ற மருந்து உதவுகிறது. முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முந்திரி தேயிலை கொசுக்களை கட்டுப்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.