நெய்வேலி வேலுடையான்பட்டில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது.
இதில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன செயல் இயக்குனர் சதீஷ்பாபு, மனிதவளத்துறை முதன்மை பொது மேலாளர் தியாகராஜூ, அறங்காவலர் குழு தலைவரும், செயல் இயக்குனருமான மோகன், அறங்காவலர்கள் அண்ணாதுரை, ரவீந்திரன், உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி தேரோட்டமும், 18-ந்தேதி பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பங்குனி உத்திரவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் தொற்று குறைந்ததால் இந்தாண்டு பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக பங்குனி உத்திர திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியிருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.