வல்லம்: கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கர் அளவிற்கு சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. 451 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3.80 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் நிலையங்களில் இருந்து எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இடையிடையே மழை அச்சுறுத்தி வருவதால் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்த நெல் மூட்டைகள் பல்லாயிரக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன.
வல்லம், பழையகல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மூட்டைகள் வரை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கொள்முதல் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் 20 நாட்களுக்கும் மேலாக தவித்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் பெய்த மழையினால் வயல்களில் அறுவடை செய்யாமல் விளைந்த நெற்கதிர்கள் சாய்ந்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்லவேண்டும். மேலும் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.