விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் நகராட்சி சார்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி இயக்குனர் சரிவர பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு நபர் தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
அந்த நபர் தினந்தோறும் குடிநீர் தொட்டியை நிரப்பிவிட்டு, மின்மோட்டாரை நிறுத்தாமல் சென்று விடுவதால் குடிநீர் தொட்டி நிரம்பி தண்ணீர் வழிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.
மேலும் காலி இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கழிவுநீராக மாறியுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், பா.ம.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்வ மணிகண்டன் தலைமையில் திடீரென குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தை இழுத்து மூடி பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த துப்புரவு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையாமல், அதில் அதிகாரி ஒருவரை உள்ளே வைத்து பூட்ட முயன்றனர்.
இதனால் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். உடன் அங்கு வந்த நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நகராட்சி அதிகாரிகள் வந்து, இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.