0 0
Read Time:2 Minute, 51 Second

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31), தேவா (20), வெற்றி (28), ஆறுமுகம் (38), மணி (47), செல்வம் (50), குணால் (22), ஹரிகரன் (32), வினோதன் (19), கந்தன் (30), நரசிம்மன் (34), அமிர்தலிங்கம் (36) ஆகிய 12 பேர் நாகை மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் வேதாரண்யம் கோடியக்கரையின் தென்கிழக்கே இந்திய எல்லைப்பகுதியில் ஜனவரி மாதம் 31-ந்தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள், அவர்களை சுற்றிவளைத்து தகராறு செய்தனர். இதனால் நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை விசைப்படகு மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 12 மீனவர்களும் கடந்த 5-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் 12 பேரும், விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் அதிகாரிகள் நாகை அக்கரைப்பேட்டைக்கு வேன் மூலம் அழைத்து வந்தனர்.

அப்போது மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார் 12 மீனவர்களுக்கும் சால்வை போர்த்தி வரவேற்றனர்.

ஊர் திரும்பிய மீனவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இலங்கை-தமிழக மீனவர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி எல்லைப்பகுதியில் மீன்பிடித்தொழில் சுமூகமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %