விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் முந்திரி, பலா கன்றுகளுக்கு ஒட்டு கட்டி வீரிய ரக கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட மர வகைகளும், மிளகாய், கத்தரி, சாமந்தி போன்ற காய்கறி, மலர் வகை கன்றுகளும், மூலிகை செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விலையிலும் அரசு அறிவிக்கும் திட்டங்களில் மானிய விலையிலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கடலூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தேவையான 10 ஆயிரம் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆனந்தி கூறுகையில், கிருஷ்ணகிரியில் இருந்து 10 ஆயிரம் தேங்காய் வாங்கப்பட்டு அவற்றை நாற்று விடும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 முதல் 6 மாதங்களில் கன்றுகள் தயாராகிவிடும். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என்றார். அப்போது பண்ணை உதவி மேலாளர் ராஜசேகர் உடன் இருந்தார்.