தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2- நாள் பயணமாக கடந்த 12-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வந்தார். தஞ்சை வந்த அவர் சுற்றுலா மாளிகையில் தங்கினார். பின்னர் அவர் முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரசுவதி மகால் நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததுடன், விமான கோபுரத்தின் உட்பகுதியில் உள்ள சோழர்கால ஓவியங்களையும் பார்வையிட்டார்.
நேற்று 2-வது நாள் கும்பகோணம் சென்ற அவர் மதியம் தஞ்சை வந்து உணவருந்தினார். பின்னர் மாலை 3.10 மணிக்கு தென்னக பண்பாட்டு மையத்துக்கு சென்றார். அங்கு கவர்னருக்கு, தெற்கு மத்திய பண்பாட்டு மையத் துணை இயக்குனர் கவுரி மராட்டே, நிர்வாக ஆலோசகர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் தங்களின் பாரம்பரிய நடனத்துடன், இசைக்கருவிகள் முழங்க கவர்னரை வரவேற்றனர்.
அவர்களுக்கு நன்றி தெரவித்த கவர்னர் தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து தென்னக பண்பாட்டு மையத்தின் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் உமாசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் சுற்றுலா மாளிகை வந்த கவர்னர், 5.20 மணிக்கு தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள தமிழக அரசின் பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனையகத்துக்கு சென்று ஓவியங்கள், சிலைகள், கைவினைப்பொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சுற்றுலா மாளிகை வந்த அவர் இரவு அங்கு தங்கினார். இன்று (திங்கட்கிழமை) காலை கார் மூலம் கவர்னர் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.