ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி உதவ கூடாது என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது 20-வது நாளாக ரஷ்யா போர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் இதுவரை இணக்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் உக்ரைனை எதிர்கொள்ள ரஷ்யா சீனாவிடம் ஆயுத உதவிகளை கோரியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆளில்லா ட்ரோன்கள் உள்ளிட்ட ஏவுகணை ஆயுதங்களை வழங்குமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியதாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆனால் இது குறித்து பதிலளித்த அமெரிக்காவுக்கான சீன தூதர், சீனாவிடம் ரஷ்ய ஆயுத உதவி கோரியது குறித்து தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி உதவ கூடாது என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.