சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மந்தகரை அருகே உள்ள தச்சன் குளத்தின் கரை பகுதியில் 68 குடும்பத்தினர் வீடு கட்டி சுமார் 50 ஆண்டு காலமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் தச்சன் குளத்தின் கரைப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக நோட்டீஸ் கொடுத்து, அறிவித்து வந்தது.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தச்சன்குளம் பகுதி மக்களுக்கு ஆதரவாக, கலெக்டர், சப்-கலெக்டர் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு மாற்று இடம் கேட்டும், வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து வீடுகளை காலி செய்ய அந்த பகுதி மக்களுக்கு அதிகாரிகள் கால அவகாசம் வழங்கினர்.
இதற்கிடையே பொதுமக்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடித்து உடைந்த கற்களை வாகனங்களில் ஏற்றி சென்றனர். 28 வீடுகள் மட்டும் அகற்றப்படாமல் இருந்தன. வீடுகளை காலி செய்வதற்கான அவகாசம் நேற்று முடிந்ததை அடுத்து வீட்டின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடித்து கற்களை டிராக்டரில் ஏற்றி சென்றனர்.