பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த தேர்தலில் 18 பெண் உறுப்பினர்களும் 15 ஆண் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தி.மு.க. 13 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த மறைமுக தேர்தலில் 32-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சண்முகப்பிரியா 22 வாக்குகள் பெற்று நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை நகராட்சி தலைவராக சண்முகப்பிரியா பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையர் சுப்பையா முன்னிலையில் சண்முகப்பிரியா பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஏனாதி பாலு, அண்ணாதுரை எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, முருகானந்தம், பார்த்திபன், ராமநாதன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வக்கீல் ராமசாமி, நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.