சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பஞ்சாபில் ஆட்சியையும் இழந்தது. இதையடுத்து, நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கட்சி நலன் கருதி தானும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கட்சிப் பதவியை விட்டு விலகத் தயார் என கூறினார்.
இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், சோனியா காந்தி மீது நம்பிக்கை இருப்பதாகவும், கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சோனியா காந்தி உத்தரவிட்டதை அடுத்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ளார்.