மணல்மேட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவடிவழகன் தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தமிழக அரசு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கி நடப்பு ஆண்டிற்கு மட்டும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் மாவட்டத்திற்கு ஒரு பேரூராட்சி என்ற விகிதத்தில் மணல்மேடு பேரூராட்சியை தேர்ந்தெடுத்து ரூ. 75 லட்சம் ஒதுக்கப்பட்டு நகர்ப்புற ஏழை மக்களை கொண்டு வடிகால் வசதி, நீர் நிலைகளை புனரமைத்தல், சாலை மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடுதல், குறுங்காடுகள் வளர்த்தல், வடிகால்களை இணைத்தல், விளையாட்டு மைதானம், பூங்காக்களை மேம்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் நேற்று பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன இலுப்பப்பட்டு கருங்கண்ணி குளம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆழப்படுத்தி தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.25 லட்சமாகும்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவடிவழகன் பணிகளை தொடங்கி வைத்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் மாரியப்பன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.