சிதம்பரம் அருகே திருச்சோபுரம் கிராமத்தில் திருச்சோபுரநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து திருச்சோபுரநாதருக்கு காலை, மாலை இரு வேளையும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தினந்தோறும் பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்து வருகிறது. மேலும் கடந்த 11-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், சாமிக்கு பல்வேறு பூஜைகளும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருச்சோபுரநாதர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அசைந்து ஆடியபடி கிராமத்தை சுற்றி வந்து நிலையை அடைந்தது. இதில் திருச்சோபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை தீர்த்தவாரி உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.