உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ அடுத்த இலக்காக கொண்டு ரஷ்ய ராணுவம் முன்னேறி வரும் நிலையில் அங்கு வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
போர் தொடங்கிய பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைனின் பல நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன. கெர்சான், கார்கீவ், செர்னிஹிவ், மரியபோல், ஒடேசே என அடுத்தடுத்து பல நகரங்களை சின்னாபின்னப்படுத்தின ரஷ்ய பீரங்கிகள். ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன. 30 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலமாயினர்.
செர்னோபில், ஸபோரிஸியா என இரண்டு அணு உலைகளையும் கைப்பற்றியது ரஷ்யா. மற்ற நகரங்களில் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை எந்த தாக்குதலையும் நேரடியாக சந்திக்காததால் அமைதியாக இருந்தது தலைநகர் கீவ். பேட்டிகள், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு என்று வழக்கம் போல் இருந்தார் அதிபர் ஜெலன்ஸ்கி.
ஆனால் நேற்றிரவு முதல் ரஷ்யாவின் பீரங்கிகள் கீவை இலக்காகக் கொண்டு தாக்தத் தொடங்கியுள்ளன. நகரின் மையத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் பற்றி எரியத் தொடங்கியுள்ளன. இருவர் உயிரிழப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முழுமையான தாக்குதல் இன்னும் ஆரம்பமாகவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
அதேநேரத்தில் ரஷ்ய படைகள் நகரை சுற்றி வளைத்துள்ளன. தாக்குதல் எந்த நேரத்திலும் வேகமெடுக்கலாம் என்ற அச்சம் இருப்பதால், கீவில் 36 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.
இதையடுத்து பெரும் நாசகார தாக்குதல் நிச்சயம் என்று பதுங்கு குழிக்குள் அச்சத்துடன் உறைந்து கிடக்கின்றனர் மக்கள். கள நிலவரத்தை உணர்ந்ததன் விளைவாகத்தான் விமானங்கள் பறக்கத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியனை வலியுறுத்தும் அதேவேளையில், நேட்டோவில் உக்ரைனால் சேர முடியாது என்பதை ஒப்புக் கொள்வதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.