தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்தவர் ரவுடி முருகன். நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்த அவர் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ரவுடி நீராவி முருகனை தனிப்படை அமைத்து திண்டுக்கல் போலீசார் தேடி வந்தனர். பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை, நீராவி முருகனை தேடி நெல்லை சென்றது.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே மீனவன்குளம் என்ற இடத்தில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏற்கெனவே, கடந்த 2019ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நீராவி முருகன், இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.