0 0
Read Time:4 Minute, 13 Second

கும்பகோணம்: சீர்காழி அருகே கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 உலோக சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மன்னன்கோவில் கிராமத்தில் மன்னார்சாமி, நல்ல காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சாமி சிலைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது.

மாயமான உலோக சாமி சிலைகளை கண்டுபிடித்து தருமாறு ஏனாக்குடி கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார்.

இந்த புகார் மனுவை ஏற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோரின் உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், பாலச்சந்திரன், சின்னதுரை உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் சூரியமூர்த்தி(வயது 75) என்பவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நெம்மேலி கிராமத்தில் உள்ள விசாலாட்சி உடனாகிய விசுவநாத சாமி கோவிலில் உள்ள விசாலாட்சி அம்மன் கருவறை மண்டபத்தில் சாமி சிலைக்கு பின்புறம் பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி ஆகிய 2 உலோக சாமி சிலைகளை சூரியமூர்த்தி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார், கருவறை மண்டபத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 உலோக சாமி சிலைகளையும் மீட்டனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சனீஸ்வரன் வெள்ளிக்கவசம், 2 வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் ஒரு வெள்ளிக் குடம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்களை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சூரியமூர்த்தியையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட சூரியமூர்த்தியை வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பாண்டி மகாராஜா உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %