நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண வருவதாக வாக்குறுதி அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர்.
அப்போது, மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர். மேலும், முதலமைச்சரை சந்தித்த 3 மாணவிகள் உட்பட 40 பேரை சந்தித்து அவர்களின் கல்வி குறித்து கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து நரிக்குறவ மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்னும் ஒரு வாரத்தில் தங்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.
மேலும், தாம் உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா என கேட்டார். அதற்கு, தங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் சந்தோஷமாக பதிலளித்தனர். மேலும், தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்குமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.