0 0
Read Time:5 Minute, 8 Second

கடலூர், தமிழக அரசுக்கு டாஸ்மாக் மது விற்பனை மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த் தப்பட்டது. குவாட்டருக்கு ரூ.10, புல்லுக்கு ரூ.40 விலை உயர்ந்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சமீபத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. குவாட்டருக்கு ரூ.10, ஆப்புக்கு ரூ.20 முதல் ரூ.40 வரையும், புல்லுக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை உயர்த்தப் பட்டது. பீர் வகைகளுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. இது மது பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இருப்பினும் வேறு வழியின்றி மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி குடித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3½ கோடி முதல் ரூ.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். ஆனால் மதுபானங்களில் விலை உயர்வால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்ட எல்லையோர பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் வரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மதுபிரியர்கள் வராததால் சில கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வழக்கமாக கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் மது பாட்டில்கள், சாராயம் குறைந்த விலைக்கு கிடைப்பதால், கடலூர் மாவட்ட மதுபிரியர்கள் புதுச்சேரிக்கு சென்று வந்தனர். தற்போது தமிழகத்தில் மதுபாட்டில் விலை உயர்த்தப்பட்டதால், அதிக அளவில் செல்ல தொடங்கி விட்டனர். முன்பு புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்கள், சாராயத்தை வாங்கி குடித்து விட்டு வருபவர்கள் தற்போது, அங்கிருந்து 4, 5 பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.

இதன் மூலம் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பெருமளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடலூர் பஸ் நிலையம், முதுநகர்,, அரிசிபெரியாங்குப்பம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதி என 15-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.4½ லட்சம் வரை மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறும்.

ஆனால் தற்போது கடை ஒன்றுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், கடலூர் மாவட்ட எல்லையோரங்களில் இருக்கும் மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் சோதனையை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பியோ தங்கராஜ், உதவி மேலாளரும், தாசில்தாருமான ஆறுமுகம், கலால் தாசில்தார் மகேஷ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கடலூர் சாவடி சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள், சாராயம் வாங்கி வந்தவர்களை பிடித்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனையை மேலும் தீவிரமாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %