ஒடைப்பட்டி காவல் நிலையத்தில் 84 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று நபர்களை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியில் உள்ள வெள்ளையம்மாள்புரம் பிரிவு அருகே உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிலை மணி மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜப்பன், தலைமை காவலர் அனந்தப்பன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும் வகையில் பல்சர் இரு சக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் சாக்கு பையுடன் வலம் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் கிருஷ்ண வாத்தியார் தெரு,கேகே.பட்டியைச் சேர்ந்த பூபாலன் என்பதும், அவர் வைத்திருந்த சாக்குபையில் 22 கிலோ எடையுள்ள உலர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. மேல் விசாரணைக்காக, ஓடைப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் ஓடைப்பட்டி, தண்ணீர்தொட்டி தெரு, சமத்துவபுரத்தைச் சேர்ந்த சரத் என்பவரின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைக்க துரிதமாக செயல்பட்ட போலீசார் குற்றவாளி சரத் என்பவரது வீட்டை சோதனையிட செல்லும் வழியில் அவ்வழியே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பல்சர் வாகனத்தில் பிளாஸ்டிக் சாக்கு பையுடன் வந்த கே.கே.பட்டியைச் சேர்ந்தவர்களான முரளிதரன் மற்றும் விஜயன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 31 கிலோ எடையுள்ள உலர் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பின்பு பிடிபட்டவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓடைப்பட்டி, சரத் என்பவரின் வீட்டில் சோதனையிட்ட போது வீட்டினுள் 31 கிலோ எடையுள்ள உலர் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது. ஓடைப்பட்டி போலீசாரின் துரிதமான செயல்பாட்டின் பலனாக மொத்தம் விற்பனைக்காக வைத்திருந்த 84 கிலோ உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில், தப்பியோடி தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சரத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதோடு, இவ்வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் மேற்கொண்டு விசாரணையும் நடந்து வருகின்றது.