தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நிறுவப்பட்டுள்ள நீர் சேகரிக்கும் கிணற்றில் இருந்து குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு, 26 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விளாங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிதாக 2 குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர், குடிநீர் சேகரிப்பு கிணறு அமைக்கும் பணி, 1,750 மீட்டர் நீளம் கொண்ட குழாய் தாங்கும் பாலம், இணைப்பு குழாய்கள், மின்மோட்டார்கள், 20 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டி, மின்அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறும்போது, கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி தஞ்சை மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 குடிநீர் சேகரிப்பு கிணறுகளில் ஒரு கிணற்றில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதனால் அந்த குடிநீர் சேகரிப்பு கிணற்றில் இருந்து விரைவில் தஞ்சை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். மற்றொரு பணியும் முடிவடைந்துவிட்டால் ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யலாம். தஞ்சை மாநகரில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்றார்.
ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், சுபாஷ்சந்திரபோஸ், அறச்செல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.