திருக்கடையூர், மார்ச்- 22;
திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்று கோவில் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை சம்ஹாரம் செய்த அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் 11:30 மணிக்கு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கோவிலுக்கு வர்ணம் தீட்டுதல், சுவாமிகள் சுவாமிகளின் சித்திரங்கள் வரைதல், யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் உதவி ஆணையர்கள் கும்பகோணம் இளையராஜா, உப்பிலியப்பன் கோவில் ஜீவானந்தம், மயிலாடுதுறை முத்துராமன் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கோவிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கோவில் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், யாகசாலை அமைப்பு, கோவிலின் உட்பிரகாரம், கோவில் மேல்தளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து அவர்கள் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். முன்னதாக கோவில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை மேலாளர் மணி மற்றும் திருக்கடையூர் கோவில் கேசியர் ஸ்ரீராம் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.