மயிலாடுதுறை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கம்ப்யூட்டர் உதவியாளர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிங்காரவேல், ஆனந்தன், சின்னதுரை, செந்தமிழ்ச்செல்வி மற்றும் வட்ட தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார். நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நடந்தது.
இதேபோல சீர்காழியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆணையர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணக்கர், இளநிலை உதவியாளர், உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட்டதால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.