0 0
Read Time:2 Minute, 47 Second

மணல்மேடு: தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த சர்க்கரை ஆலையில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையில் 1993-ம் ஆண்டில் ரூ.25 கோடி லாபம் ஈட்டியது. 1994-ம் ஆண்டு ரூ.33 கோடியில் சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை, மறுசீரமைப்பு செய்ய 110 விதியின் கீழ் 2015-ம் ஆண்டில் ரூ.56 கோடி நிதியை ஆலை புனரமைப்பு பணிக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். ஆனால் அவர் மறைவிற்கு பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை. தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017-ம் ஆண்டு சர்க்கரை ஆலை மூடப்பட்டது.

இங்கு வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாக குறைக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் தலைஞாயிறு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாக பட்ட சிரமத்தை போக்கும் வகையில் இந்த ஆலை திறக்கப்படும் என்ற அறிவிப்பு மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் உள்ளதாகவும், பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %