வடலூர் சத்யா வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வளையல் கடை(பேன்சிஸ்டோர்) இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, கடையை ராஜேந்திரன் பூட்டி சென்றார்.
இரவு 11.30 மணிக்கு திடீரென கடையில் இருந்து கரும் புகை வந்தது. இதுபற்றி அறிந்த ராஜேந்திரன், உடனடியாக கடையை திறந்து பார்த்தார். அப்போது, கடையின் உள்ளே தீப்பற்றி எரிந்தது. உடன் அவர் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் குறிஞ்சிப்பாடி மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகே தீயை முற்றிலும் அணைத்தனர்.
இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.