மயிலாடுதுறை, குத்தாலத்தில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்றும், நாளை மறுநாளும் நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஒன்றியங்களில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான 3 சக்கரவண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்று வண்டி, கை, கால் செயற்கை உறுப்புகள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு கீழ்க் குறிப்பிடப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் மருத்துவ மதிப்பீட்டு முகாம்களில் பங்கேற்கலாம்.
இன்று (வியாழக்கிழமை) மயிலாடுதுறை டி.இ.எல்.சி. உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும், 26-ந்தேதி (சனிக்கிழமை) குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
எனவே மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டார வள மையங்களில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறன் அடையாளஅட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற பிறப்புச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 எண்ணிக்கை, வருமானச்சான்று நகல், குடும்பஅட்டை நகல், தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் – மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். லலிதா கூறியுள்ளார்.