0 0
Read Time:3 Minute, 0 Second

புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின் உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த பூச்சொரிதல் விழாவில் பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பரதநாட்டிய கலைஞர் காளிதாஸ் நிகழ்ச்சியில் ’எல்லாம் வல்ல தாயே’ என்ற பாடலுக்கு தான் பரதம் கற்றுக்கொடுத்த மாணவர்கள் மற்றும் மகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். பாடல் முடியும் வரை விடாமல் நடனம் ஆடிய காளிதாஸ் நெஞ்சை பிடித்த படி நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். பின்னர் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே காளிதாஸின் உயிர் பிரிந்தது.

இறந்த பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸுக்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம்கொண்ட காளிதாஸ், பரத நாட்டியாலய பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மிருதங்க வித்துவான், மகள் பரத கலைஞர், மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியை என கலைக்காக வாழ்ந்த குடும்பம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் ’ஆடல் வல்லான்’ என்ற விருது, ’கெளரவ டாக்டர் பட்டம்’, 1000க்கும் மேற்பட்ட ஷீல்டுகள், பதக்கங்கள் என வாங்கியுள்ள காளிதாஸ், வரும் வருடத்தில் ’கலைமாமணி விருது’ கிடைக்கும் என தனது நண்பர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோவிலில் நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %