சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையில் வடசென்னை பகுதிகளில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு வாட்ஸ்-அப் மூலம் போதை கும்பல் ஒன்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர் மீரான், செல்வகுமார் கொண்ட தனிப்படை போலீசார் கல்லூரி மாணவர் ஒருவர் உதவியுடன் போதை மருந்து விற்பனை செய்யும் வாட்ஸ்-அப் குரூப்பில் இணைந்து போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணித்தனர்.
அதாவது, தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவந்தன் (வயது 24) என்ற பட்டதாரி வாலிபர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஒரு போதை கும்பலிடம் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு ரகசியமாக உயர்ரக போதை மாத்திரைகள், உயர்ரக கஞ்சாக்களை கடத்தி வந்து வாட்ஸ்-அப் குழு மூலம் கஞ்சா, போதை மாத்திரைகளை சில ஈ.சி.ஆர். சொகுசு விடுதிகளில் நடைபெறும் மது விருந்துகளுக்கும், சென்னை மாநகரம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜீவந்தனை மடக்கி பிடித்து கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வடசென்னைக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் போதை ஊசிகள், மாத்திரைகள் விற்ற கும்பலைச் சேர்ந்த ஸ்டாலின் (34), சையது அசார் (23), கோழி உதயா (21), சந்தோஷ் (23) உள்பட 6 பேரையும் போதை தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்தனர்.