தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்துக்கேட்க அரசு முடிவு செய்துள்ளது. சட்டத்தின் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் 1994-இல் குறைபாடுகள், நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதையடுத்து, புதிதாக அறிவிக்கப்பட்ட திருத்தச் சட்டம் 2022-ஐ அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் கருத்துக் கேட்கத் திட்டமிட்டுள்ளது. இன்றைய தேவைகளுக்கு ஏற்ப புதிய விதிகளை அமல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொதுவான பகுதிகள், வசதிகளின் பராமரிப்பு, நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக, குடியிருப்போர் சங்கத்தை உருவாக்கவும், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், பொதுவான பகுதிகள் மற்றும் வசதிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவும் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்தும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அடுக்ககங்களின் உரிமையாளர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலுடன் பழுதடைந்த கட்டிடத்தை மீண்டும் மேம்படுத்த முடியும் என்ற துணை விதிகள் அறிமுகப்படுத்தவும், சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாதவர்களுக்குத் தண்டனை விதிக்க வழிவகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் 2022-ஐ அமல்படுத்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.