0 0
Read Time:2 Minute, 28 Second

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், சிதம்பரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டார். அதாவது, சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு போராட்டங்கள், கூட்டமாக கூறி ஆலோசனைகள் எதுவும் நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே நேற்று காலை, கோட்டாட்சியர் ரவி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சிதம்பரத்தில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு உடனடியாக இன்று (அதாவது நேற்று) முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவித்து இருந்தார்.

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் இந்த உத்தரவு திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.அதாவது, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 13 மணி நேரத்தில், வாபஸ் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் எதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று யோசிப்பதற்குள், அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் நகரில் என்னதான் நடக்கிறது என்பது மக்களுக்கு சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %