மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கடலூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லியோ தங்கதுரை, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் ஜவான் பவன் சாலையில் இருந்து தொடங்கிய பேரணியானது அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக சென்று வந்தது.
பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.
முன்னதாக மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.