திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பொதுப்பாதையில் போடப்பட்ட தீண்டாமை தடுப்பை, ஊர்மக்கள் உடைத்தெறிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூதிபுரத்தில், கடந்த ஐந்து தலைமுறைகளாக தாழ்த்தப்பட்ட சமுதாய இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதை, அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு வழியே செல்கிறது.
இந்நிலையில், தோப்பின் உரிமையாளர் திடீரென அந்தப் பாதையை மறைத்து தீண்டாமை தடுப்பு ஏற்படுத்தி, யாரும் செல்ல முடியாமல் தடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, அங்கு அமைக்கப்பட்ட தீண்டாமை தடுப்பை ஊர்மக்கள் உடைத்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.