வலங்கைமானை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் இருவர், குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, கலெக்்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரியதர்ஷினி, சுவேதா. 16 வயதான இந்த மாணவிகள் இருவரும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்த 7-ம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டிய பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்தனர்.
பின்னர் மாணவிகள் இருவரும் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேலாக பள்ளி செல்லா மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் மாணவர்கள் வேலை செய்யும் இடத்திலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் குறித்து எடுத்துக்கூறி குழந்தை தொழிலாளர்களாக இருந்த மாணவர்களை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை தொழிலாளர்களாக இருந்த மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்த மாணவிகள் இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். மாணவிகள் பிரியதர்ஷினி, சுவேதா ஆகிய இருவரும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாணவிகளுக்கு சால்வை அணிவித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ என்ற புத்தகத்தை வழங்கி, இதுபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
மாணவிகள் பிரியதர்ஷினி, சுவேதா ஆகியோரின் செயலை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவிகளை நேரில் அழைத்து தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள், கலைஞர் உரை புத்தகங்களையும் வழங்கி பாராட்டினார்.
இந்த நிலையில் மாணவி பிரியதர்சினி மற்றும் அவரது ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோருக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்.
மாணவி பிரியதர்ஷினி தனது குடும்ப வறுமையால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு, அவரது உறவினர்கள் படிப்பை பாதியில் கைவிடாதே என அறிவுைர வழங்கியுள்ளனர்.
இதனால் தனது தவறை உணர்ந்த மாணவி பிரியதர்ஷினி தன்னைப்போல படிப்பை பாதியில் விட்ட 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் என 20 மாணவ-மாணவிகளை சந்தித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவி செய்து உள்ளார்.
இந்த சம்பவம் வலங்கைமான் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.