சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் இறுதியாண்டு படித்து வரும் இளநிலை வேளாண் மாணவர்களுக்கு வண்டுராயன்பட்டு அரசு விதைப் பண்ணையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், வட்டார தொழில் நுட்ப மேலாளர் கல்பனா கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக மாணவர்களுக்கு உழவர் குழு சார்ந்த செயல்பாடுகள், உழவன் செயலி, செயல்முறை விளக்க பண்ணை அமைத்தல், உணவு பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குதல் ஆகியன குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் வேளாண் காப்பீடு பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக பயிர் அறுவடை மதிப்பு ஆய்வாளர் விஜயசாந்தி வரவேற்றார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் ராஜ் பிரவீன் செய்திருந்தார். முடிவில் மாணவ பிரதிநிதி சத்யாதேவி நன்றி கூறினார்.