கொலை மிரட்டல், முறையற்று சிறைபிடித்தல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் , ஆயுதங்களுடன் கலகம் செய்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு.
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தேர்தலின் போது அதிமுகவினர் தங்களை தாக்கியதாக திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர் 9 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைதலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. காலையில் பேரூராட்சி தலைவர் தேர்தல் துவங்கும் சமயத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதனையடுத்து அங்கிருந்த அரசியல் கட்சியினரை கலைக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதில் வெள்ளலூர் பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினர் குணசுந்தரியின் கணவர் செந்தில் என்பவரின் மண்டை உடைந்தது.
இந்நிலையில் அங்கிருந்த அதிமுகவினர் 9 பேரை கைது செய்த காவல்துறையினர் திமுகவினரை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் திமுக நிர்வாகியை தாக்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் தேர்தல் நடைபெறும் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது அதிமுகவினர் போலீசாரிடம் இருந்து லத்தியை பிடுங்கி செந்திலை தாக்கியதாகவும் இதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதனிடையே தலையில் காயமடைந்த செந்தில்குமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் அதிமுகவினர் தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிமுகவினர் 9 பேர் மீதும் கொலை மிரட்டல், முறையற்று சிறைபிடித்தல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் , ஆயுதங்களுடன் கலகம் செய்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மருதாச்சலத்தின் மகன் குமரேசன்,சபரி பிரியன், கரிகாலன், கார்த்திக்ராஜா, மனோஜ் குமார்,ரகுபதி, சண்முகம், சவுந்திரராஜ்,நாகராஜ் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் நீதபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.