கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதம் மணிலா சாகுபடி செய்திருந்தனர். கார்த்திகை பட்டத்தில் விதைத்த இந்த மணிலா தற்போது விளைச்சல் அதிகமாகி அறுவடைக்கு தயாராகி வருகிறது. சில இடங்களில் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் மொத்தம் 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மணிலா சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் உள்ள பகுதியில் மட்டும் அறுவடை செய்து, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர் உள்பட 10 இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விற்பனைக்காக மணிலாவை விவசாயிகள் கொண்டு சென்று வருகின்றனர்.
குறிப்பாக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 450 மூட்டை மணிலா வரத்து இருந்தது. குறிஞ்சிப்பாடிக்கு 1100 மூட்டைகள் மணிலா விற்பனைக்கு வந்தது. 80 கிலோ கொண்ட முதல் தரம் மணிலா ஒரு மூட்டை ரூ.7450-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2-ம் தரம் ரூ.5800-க்கு விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையாக ரூ.6900-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மணிலாவுக்கு நல்ல விலை உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது பற்றி கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் கூறுகையில், கார்த்திகை, மார்கழி பட்டத்தில் விதைத்த மணிலா தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மணிலாவுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நல்ல விலை உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் இந்த விலையை வியாபாரிகள் கட்டுப்படுத்தி, குறைத்து விடக்கூடாது. மணிலா வரத்து அதிகமாக வரும் போது, இந்த நிலை ஏற்படும். இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் சுதந்திரமாக மணிலாவை விற்பனை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.