பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் நேற்று பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார வசதிகள், நீதிமன்றங்களுக்கு வரும் வக்கீல்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ததுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு நீதிபதிகளை அறிவுறுத்தினார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முனபு ஏற்பட்ட தீவிபத்தில் நீதிபதி அறையில் சேதமடைந்த ஏ.சி. எந்திரத்துக்கு பதிலாக புதிய எந்திரத்தை மாற்றும்படி பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக ஆய்வு செய்ய நீதிமன்றத்துக்கு வந்த ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனை கடலூர் மாவட்ட தலைமை நீதிபதி ஜவகர், தலைமை குற்றவியல் நீதிபதி பிரபாகரன், பண்ருட்டி சார்பு நீதிபதி ராஜ்குமார், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவல்லி மணிமாறன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சன்மதி மற்றும் பண்ருட்டி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.