0 0
Read Time:7 Minute, 50 Second

மயிலாடுதுறை, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 375 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தன. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்த அளவே பஸ்கள் இயங்கின. மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 69 பஸ்களில் 35 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல சீர்காழியில் உள்ள 41 பஸ்களில் 21 பஸ்களும், பொறையாறில் உள்ள 28 பஸ்களில் 8 பஸ்களும் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 138 பஸ்களில் 64 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

அவர்கள் பஸ் நிலையத்தில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டாலும் அதிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ் படிக்கட்டுகளிலும் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். தனியார் பஸ்கள் முழு வீச்சில் இயக்கப்பட்டன. ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் வழக்கம் போல இயங்கின.

மயிலாடுதுறையில் நேற்று காலை 11 மணி அளவில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல செயலாளர் பொன்.நக்கீரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலையில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர். தொடர்ந்து கச்சேரி சாலை வழியாக வந்த தொழிற்சங்கத்தினர் கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல பூம்புகார்- கல்லணை சாலையில் மாப்படுகை ரயில்வே கேட் அருகில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இ்ந்த இரு சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்ட மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், சி.ஐ.டி.யூ .மின்சார வாரியம் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் 25 பெண்கள் உட்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைப்போல மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை தபால் நிலையம் குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்கியது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்ட தொகுப்புகளை கைவிடவேண்டும்.

மின்சார சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வேலை நிறுத்தம் காரணமாக சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நின்றனர். ஒரு சிலர் அவ்வழியாக செல்லும் கார், மோட்டார் சைக்கிள் மூலம் உதவி கேட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு பயணம் செய்தனர். குறிப்பாக நேற்றுபள்ளி செல்லும் மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர் மேலும் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் அரசு போக்குவரத்து கழகத்தில் பெரும்பான்மையான பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தமிழ்நாடு மின்சார துறை அலுவலகம் உள்ளிட்ட பெரும்பான்மையான அலுவலகங்களில் பணியாளர்கள் பணிக்கு வராததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் செல்லப்பன் தலைமை தாங்கினார்.

மறியல் போராட்டத்தின் போது அனைத்து தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 69 பெண்கள் உள்பட 375 பேர் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %