விருத்தாசலம் – கடலூர் இடையே நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் 18-வது வார்டு பகுதியில் உள்ள அரசு சேமிப்பு குடோனுக்கு செல்லும் வழியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது.
இருப்பினும் அங்கு பணியாளர்கள் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பணியை தடுத்து நிறுத்தினர்.
அப்போது குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல், சாலை பணியை மேற்கொள்வதால் சாலையின் தரம் குறைந்து விரைவில் சாலை பழுதாகும் நிலை ஏற்படும் எனவும், மேலும் அரசு சேமிப்பு குடோன் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும் அந்த இடத்தில் தரமாக பணியை மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்துவிட்டு சாலைப்பணியை மேற்கொள்வதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.