0 0
Read Time:2 Minute, 56 Second

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்ததும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்ய பெற்றதுமாக இக்கோவில் திகழ்கிறது. வெங்கடாசலபதி பெருமாள் திருவோண நட்சத்திரத்தில் இத்தலத்தில் அவதரித்த தினத்தையொட்டி பங்குனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை வெள்ளிப்பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் கடந்த 22-ந் தேதி ஆதிசேஷ வாகனத்திலும், 23-ந் தேதி கருட வாகனத்திலும், 24-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 25-ந் தேதி யானை வாகனத்திலும், 26-ந் தேதி புன்னை மர வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவரான பொன்னப்பன், பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், இரவு 8 மணிக்கு சப்தாவரணமும், நாளை (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 31-ந் தேதி பகல் 12 மணிக்கு அன்னப்பெரும்படையல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %