பொதுவேலை நிறுத்தத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் நாளில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
போராட்டத்தில் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கைவிடவேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் அரசு ஊழியர் சங்கங்கள், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. இந்த நிலையில் நேற்று 2-வது நாள் பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதனையொட்டி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல செயலாளர் போன்.
நக்கீரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், சி.ஐ.டி.யூ.. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மின்சார வாரிய மத்திய சங்க மாவட்ட செயலாளர் கலைவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்.
இதைப்போல தலைமை தபால் நிலையம் வாசலில் அஞ்சல் ஊழியர்களும், எல்.ஐ.சி. நிறுவன வளாகத்தில் இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் அரசு ஊழியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவ.பழனி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா பேசினார். கலெக்டர் அலுவலக வாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் நேற்று 8 இடத்தில் பொது வேலைநிறுத்தத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டன. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.