கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45), எலக்ட்ரீசியன். இதேபோல் அதேஊரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (46), பொக்லைன் டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று காலை குளிப்பதற்காக அதேஊரில் உள்ள சாமியார் குளத்துக்கு சென்றனர். பின்னர், அவர்கள் தங்களது ஆடைகள் மற்றும் செல்போன்களை கரையில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
குளிக்க சென்ற 2 பேரும் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த 2 பேருடைய குடும்பத்தினரும் குளத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ரத்தினவேல், திருநாவுக்காரசு ஆகியோரின் துணிகள், செல்போன் கரையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் சிலர் குளத்தில் இறங்கி தேடி, ரத்தினவேல், திருநாவுக்கரசு ஆகியோரது உடல்களை பிணமாக மீட்டனர்.
இதைபார்த்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இந்த பரிதாப சம்பவம் பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார், குளத்தில் மூழ்கி பலியான 2 பேரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் பண்ருட்டி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடலூர் பார்வதிபுரம் காரப்பன்குளத்தில் நேற்று 2 பேர் பிணமாக மிதந்தனர். இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனே வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் சுமார் 55 வயதுடைய கணவன்-மனைவி என்பது தெரிந்தது.
மேலும் இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக வள்ளலார் சபை பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது பற்றி வேறு எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. நேற்று காலையில் குளித்த போது கணவன்-மனைவி இருவரும் நீரில் மூழ்கி இறந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.