நெல்லிக்குப்பம், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வந்தது. தற்போது கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்த கிடங்கில் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லாததால் ஆற்று கரையோரம் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத இடங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி கவுன்சிலர்கள், குப்பை கொட்டுவதற்கு புதிதாக இடத்தை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என மேயர் சுந்தரி ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், தாசில்தார் பூபாலச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதிக்கு சென்றனர்.
பின்னர் அங்கு குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக இடத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அங்கிருந்த அதிகாரிகளிடம், கடலூர் மாநகராட்சி பகுதியில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு உடனடியாக இந்த பகுதியில் அரசு நிபந்தனைக்கு உட்பட்டு குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.