4 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார். இதனையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அவருக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், மலர்கொத்து வழங்கியும் முதலமைச்சரை வரவேற்றனர். மேலும், விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை செலுத்தி டெல்லி வாழ் தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை – வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக விளக்கியுள்ளார். இதையடுத்து, இந்திய அரசியல் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாகவும், நாளை மறுநாள் டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்விழாவில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.