தற்போதைய முதல்-அமைச்சர் துபாய் பயணம் சென்று விட்டு திரும்பியதும், நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காகித கப்பல் என்று குறிப்பிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையை நல்ல கட்டமைப்புடன் வைத்திருந்தது அ.தி.மு.க. தான். ஆனால் தற்போது துபாய் பயணத்தை முடித்து விட்டு ரூ.6,100 கோடிக்கு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது எப்போது பயன்பாட்டிற்கு வரும், அதற்கான உள்கட்டமைப்பு வாய்ப்புகள் உள்ளனவா என்பது தான் எங்கள் கேள்வி. 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்திற்கு 1 லட்சம் டிரில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2001-2017 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.34 ஆயிரம் டிரில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் டிரில்லியன் டாலர் முதலீடு பெற்றாலே பெரிய வெற்றி தான்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 41 நிறுவனங்களிடம் இருந்து ரூ.8,835 கோடி முதலீடு பெற்று 35 ஆயிரம் வேலைவாய்ப்பினை உருவாக்க ஒப்பந்தம் கொண்டு வந்தார்.
இதன் மூலம் 2015-ம் ஆண்டு 98 நிறுவனங்களின் 44 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி விட்டன. 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த 21 நிறுவனங்கள் தற்போது பல்வேறு வளர்ச்சி நிலையில் உள்ளன. மேலும் 304 நிறுவனங்கள் ரூ.3 லட்சத்து 501 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில் 81 நிறுவனங்களில் 1,10,844 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வணிக உற்பத்தியை தொடங்கி விட்டன. இதில் 191 நிறுவனங்கள் பல்வேறு வளர்ச்சி நிலையில் உள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, மீண்டும் வெளிநாடு சென்று முதல்-அமைச்சா் தொடங்கி வைத்துள்ளார். அவ்வாறு இருக்க நாங்கள் போட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல் என்று எப்படி கூற முடியும். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே தவிர காகித கப்பல் என்று குறை கூறிக்கொண்டு இருக்கக் கூடாது.
எனவே கடந்த ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொடர்ந்து கண்காணித்து, பல்வேறு தொழில் திட்டங்களை திறம்பட தொடர்ந்து நடத்தி தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.